விவசாயிகள் தற்கொலைகளுக்கு, குடும்பப் பிரச்சினைகள், மதுப்பழக்கம், உடல் நலக்கோளாறு ஆகியவையே காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலைகள் குறித்து விளக்கமளிக்குமாறு, மனித உரிமைகள் ஆணைய நோட்டீஸுக்கு அனுப்பியிருக்கும் பதிலில், ’போலீஸ் நிலையங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை குறித்த ஆவணப்பதிவுகள் இல்லை. தொழில்ரீதியான நஷ்டம், கடன் ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை. 'குடும்பப் பிரச்சனை, மதுப்பழக்கம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள், சொத்துத் தகராறுகள் ஆகியவையே விவசாயிகள் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையில் 2011-ம் ஆண்டில் 1326-ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2015-ல் 581-ஆக குறைந்துள்ளது என்ற புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து மத்தியப் பிரதேச விவசாயிகள் சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’இது பழைய தந்திரம்தான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று காட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை. விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத்திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி. தற்கொலைகளுக்கு கடன்தான் காரணம் என்று காவல் நிலையங்கள் பதிவுகூட செய்வதில்லை. நாட்டின் விவசாயக் கொள்கை, விவசாயிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளி, மீளமுடியாத நிலையில் தற்கொலைக்கு தூண்டுகிறது’ என்று கூறினார்.