புயலால் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ம.பி டாக்டர்.. `நிவர்-கொரோனா' சோகம்!

புயலால் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ம.பி டாக்டர்.. `நிவர்-கொரோனா' சோகம்!
புயலால் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ம.பி டாக்டர்.. `நிவர்-கொரோனா' சோகம்!
Published on

நிவர் புயலால் சென்னை, கடலூர், புதுச்சேரி போன்ற இடங்களில் மக்கள் தங்கள் உடைமைகளையும் இழந்துள்ளனர். பெரிய அளவில் இல்லையென்றாலும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இதே நிவர் புயலால் மருத்துவர் ஒருவர் சிகிச்சை கிடைக்காமல் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த டாக்டர் சுபம் உபாத்யாய். 26 வயதான இவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர். போபாலில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். ஒப்பந்த அடிப்படையில் அங்கு மருத்துவராக பணியாற்றி வரும் உபாத்யாய்க்கு கடந்த மாதம் 28ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரின் உடல்நிலை மேலும் மோசமாகியது. இதனால் 15 நாட்களுக்கு முன்பு சிராயு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு நடந்த பலகட்ட சோதனையில், கொரோனா வைரஸ் உபாத்யாய்யின் நுரையீரலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் உடனடியாக அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டது. அதன்படி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சென்னையில் நடக்க இருந்தது.  இதையடுத்து உபாத்யாய்யை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.

நேற்று வீசிய நிவர் புயலால் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டதால் டாக்டரை சென்னை அழைத்து வர முடியவில்லை. இதன் காரணமாக, நேற்று உபாத்யாய் பரிதாபமாக உயிரிழந்தார். உபாத்யாய் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். அதனால் தான் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவரின் மரணம் தொடர்பாக சிராயு மருத்துவமனை டாக்டர் அஜய் கோயங்கா பேசுகையில், ``டாக்டர். சுபம் உபாத்யாயா (26) கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார். இவரது நுரையீரல் 100 சதவீதம் பாதிக்கப்பட்டு நவம்பர் 10 முதல் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அழைத்துச் சென்றிருந்தால் சுபம் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்" என்று கூறியுள்ளார். 

அவரின் மறைவுக்கு, மத்திய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ``டாக்டர் சுபம் நாட்டின் உண்மையான குடிமகன் என்பதை நிரூபித்துள்ளார். அவர் COVID-19 நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தார், ஆனால் அதனால் பாதிக்கப்பட்டார். நாங்கள் அவரைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். அரசாங்கம் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நிற்கும்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com