கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்துக்கும் ஹிஜாப் எதிர்ப்பு பரவி இருக்கிறது. அங்கு ஒரு கல்லூரியில் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் நடத்திய போராட்டத்தால், கல்லூரி நிர்வாகம் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக ஹிஜாப் விவகாரம் பெரும் புயலை கிளப்பி வந்தது. உடுப்பி, மாண்டியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக, ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகங்கள் அனுமதி மறுத்தன. இதனைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால் கல்லூரிச் சாலைகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சில பகுதிகளில் இருதரப்பினரும் மோதிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கர்நாடகா உயர் நீதிமன்றம், "இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை மதம் சார்ந்த உடைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அணிந்து செல்லக் கூடாது" என சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் டாட்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத்தின் மகளிர் அணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்தக் கல்லூரி முதல்வர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதில், "கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தங்கள் மதம் அல்லது சமூகம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் ஹிஜாப், புர்கா போன்ற ஆடைகளை அணியக் கூடாது" என உத்தரவிட்டார். இதனால் நாளை முதல் அந்தக் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்போது தான் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் சூழலில், தற்போது மத்திய பிரதேசத்துக்கும் இந்த பிரச்னை பரவியிருப்பது சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.