அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா, தெற்கு டெல்லியிலுள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று வகுப்பறைகளைப் பார்வையிட்டார்.
பிரம்மாண்ட கட்டமைப்புகள் கொண்ட ராஜ்கியா சர்வோதய பால் வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளி, டெல்லி வினோத் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மொத்தம் 2,299 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு மொத்தம் 80 ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். ஆசிரியர்கள் தவிர, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பள்ளியில் வேலை செய்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில், காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவிகளுக்கும், பிற்பகல் 1 மணி முதல் 5.30 மணி வரை மாணவர்களுக்கும் கல்வி கற்றுத் தரப்படுகிறது. ஏசி வகுப்பறைகள், நீச்சல் குளம், சுத்தமான கழிப்பறை, தரம் உயர்ந்த விளையாட்டு உபகரணங்கள், வகுப்புகளில் எல்.இ.டி. பல்புகள் என பள்ளி முழுவதுமே நவீன வசதிகளால் ஜொலிக்கிறது. நவீன வசதிகளைக் கொண்ட இந்தப் பள்ளியில் கட்டணமே கிடையாது என்பது இப்பள்ளியின் கூடுதல் சிறப்பு.
இந்நிலையில், 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ட்ரம்ப்பின் மனைவி மெலனியா இப்பள்ளியை பார்வையிட்டார். அவருக்கு குழந்தைகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் முறையை நேரில் கண்டு ரசித்த மெலனியா, மழலையர் வகுப்பிற்கும் சென்றார். அங்கு, குழந்தைகளுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார் மெலனியா. மேலும் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.
பின்னர் பேசிய அவர், “இது ஒரு அழகான பள்ளி. என்னை பாரம்பரிய நடனம் மூலம் வரவேற்றதற்கு மிக்க நன்றி. இந்தியாவுக்கு நான் வருவது இதுவே முதன்முறை. இங்குள்ள மக்களின் வரவேற்பு என்னை திகைக்க வைத்துள்ளது. மக்கள் மிகவும் அன்பாகவுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மாணவிகள் சிலர் தாங்கள் வரைந்த ஓவியங்களை மெலனியா ட்ரம்புக்கு வழங்கினர். ஓவியங்களை கண்டு ரசித்த அவர், அதனை வரைந்த மாணவிகளைப் பாராட்டினார். மாணவ, மாணவிகளுடன் கைக்குலுக்கி ராஜ்கியா சர்வோதய பால் வித்யாலயா அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து மெலனியா விடைபெற்றார்.