5 நிமிடங்கள் எஸ்பியாக பதவி வகித்த சிறுவர்கள் கள்ளச்சாராய கும்பலை பிடிக்க உதவியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு காவல்துறை பயிற்சி அதிகாரிகள் (Special Police cadets) என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 10 அரசுப் பள்ளிகளிலுள்ள 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காவல்துறை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்களுக்கு போக்குவரத்து நெரிசலை சரி செய்வது மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு காவல்துறையினரை போல காக்கி உடையும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக 40 மாணவர்கள் ஜபல்பூர் மாவட்ட எஸ்பியை சந்திக்க வந்துள்ளனர். அப்போது இந்த மாணவர்களுடன் எஸ்பி அமித் குமார் சிங் உரையாற்றினார். மேலும் அவர் இந்த மாணவர்களிடம் யாருக்காவது எஸ்பி ஆகும் ஆசை உள்ளதாக எனக் கேட்டுள்ளார். அதற்கு மூன்று மாணவர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். உடனே இவர்கள் மூவரையும் ஐந்து நிமிட எஸ்பியாக பணியாற்ற அமித் குமார் சிங் அனுமதி வழங்கினார்.
இந்தச் சமயத்தில் அச்சிறுவர்கள் மூவரும் தங்களின் பகுதியில் இயங்கி வந்த கள்ளச்சாராய கும்பலை பிடிக்க தாங்கள் வசிக்கும் பகுதி காவல்துறையினருக்கு தற்காலிக எஸ்பியாக உத்தரவு கொடுத்துள்ளனர். இந்தத் தகவலை வைத்து நீண்ட நாட்களாக பிடிப்படாமல் இருந்த கள்ளச்சாராய கும்பலை காவல்துறையினர் உடனே வலைவீசி பிடித்துள்ளனர்.
மேலும் இச்சிறுவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் காவல்துறையினர் சிலர் லஞ்சம் வாங்குவது தொடர்பான தகவலையும் எஸ்பிக்கு அளித்துள்ளனர். வழக்கமாக ஐந்து நிமிட எஸ்பி, ஐந்து நிமிட மாவட்ட ஆட்சியர் ஆகிய அனைத்து பதவிகளும் வெறும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிலையோடு நின்றுவிடும்.
ஆனால் இந்த மூன்று சிறுவர்கள் ஐந்து நிமிட எஸ்பியாக பணியாற்றி ஒரு கள்ளச்சாராய கும்பலை பிடிக்க உதவியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சிறுவர்கள் பலரின் பாராட்டை பெற்று வருகின்றனர்.