“அம்மா.. நான் உயிரோடிருக்க மாட்டேன்” - நக்சலைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர்

“அம்மா.. நான் உயிரோடிருக்க மாட்டேன்” - நக்சலைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர்
“அம்மா.. நான் உயிரோடிருக்க மாட்டேன்” - நக்சலைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர்
Published on

நக்சலைட்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரின் உதவியாளர் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேசிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் குழுவினர் சென்றிருந்தனர். அந்த மோதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ மற்றும் இரண்டு போலீஸாரும் உயிரிழந்தனர். அச்சுதானந்த் சாஹூ தனது உதவியாளர் மோர்முகூட் சர்மா, ரிப்போர்டர் தீரஜ் குமார் இருவருடன் தான் அப்பகுதிக்கு சென்றிருந்தார். 

இந்நிலையில், துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து உதவியாளர் மோர்முகூட் சர்மா வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ‘ஐ லவ் யூ அம்மா..நான் இறந்துவிடுவேன் என நினைக்கிறேன்’ என சர்மா பேசியிருப்பது எல்லோரையும் ஒரு நிமிடம் உருக வைத்துவிட்டது. தரையில் படுத்துக் கொண்டு கேமராவை பார்த்து அவர் பேசுவது போல் அந்த வீடியோ உள்ளது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கிச் சுடும் சத்தம் பின்னால் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

“இங்கே ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் தந்தேவாடா பகுதியில் இருக்கிறோம். தேர்தல் செய்திகளை பதிவு செய்ய வந்திருந்தோம். நாங்கள் எங்கள் வழியில் சென்றோம். எங்களுடன் ராணுவத்தினர் வந்தனர். திடீரென நாங்கள் நக்சலைட்டுகளால் சூழப்பட்டோம். 

அம்மா, நான் உயிரோடு இருந்தால், அது நிச்சயம் ஆறுதலாக இருக்கும். அம்மா, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இந்தத் தாக்குதலில் நான் கொல்லப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழல் அவ்வளவாக சரியில்லை. என் கண் முன் மரணத்தை எதிர்நோக்கும் இந்தத் தருணத்திலும் அதனை பற்றி எனக்கு எந்தப் பயமுமில்லை. ஏன் மரணத்தை பற்றிய பயமில்லை என்பது எனக்கு தெரியவில்லை. உயிர் வாழ்வது சிரமம்தான். இங்கு 6-7 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை சூழ்ந்து இருக்கிறார்கள்” என்று அதில் சர்மா பேசியிருந்தார். 

அதேபோல், மற்றொரு வீடியோ பதிவு ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் முகம் எதுவும் தெரியவில்லை. சிலர் பேசுவது மட்டும் கேட்கிறது. ஒருவர் ஆம்புலன்ஸை உடனடியாக அழையுங்கள் என்று குரல் எழுப்புகிறார். ‘முர்முகூர் சர்மா தரையில் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு ராணுவ வீரர் கூறுகிறார். தண்ணீர் வேண்டும் என்று முர்முகூர் கேட்கிறார். ‘இல்லை நண்பா, நீ தரையில் படுத்துக் கொள். ராணுவ வீரர்கள் வந்துவிடுவார்கள். கவலைப்படாதீர்கள்’ என்று அதற்குப் பதில் அளிக்கிறார். 

இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய முர்முகூர் சர்மா, “4 இச் என்னுடைய தலையை மேல் தூக்கி இருந்தால் நானு கொல்லப்பட்டிருப்பேன்” என பரபரப்பான அந்தத் தருணங்களை பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், ‘அச்சுதானந்த் சாஹூ தன்னுடைய ஐ.டி கார்டையும், கேமராவையும் காட்டி தான் ஒரு தூர்தர்ஷன் செய்தியாளர் என நக்சலைட்களிடம் கூற முயற்சி செய்தார்’ என அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com