அசாமில் பட்டாசு வெடிக்க ஆட்சேபம் தெரிவித்த நபரை திருமண கோஷ்டியினர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்பாரியில் உள்ள குர்ராதல் என்ற இடத்தில் திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் குதூகலப்படுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க முயன்றனர். அப்போது அருகில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான ஜத்தின் தாஸ் என்பவர் பட்டாசு வெடிக்க ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அப்போது திருமண வீட்டாருக்கும், ஜத்தின் தாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்ற திருமண விழாவில் பங்கேற்றவர்கள் ஜத்தின் தாஸை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜத்தின் தாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஒன்று கூடிய உள்ளூர் மக்கள் சம்பவத்தை கண்டித்து திருமண மண்டபத்தை சூறையாடியதால் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து வன்முறையை கட்டுப்படுத்தினர். பதற்றமான சூழல் இருப்பதால் அந்தப் பகுதியில் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை காரணமாக திருமண விழாவும் நிறுத்தப்பட்டது.