ஹரியானாவில் உள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகத்தில் நீதிபதி தலைமையில் சோதனை நடைபெற்றது.
ஹரியானா மாநிலம் சிர்சாவில் பாலியல் குற்றவாளி ராம் ரஹிம் சிங்கின் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகத்தில் இருந்து விலை உயர்ந்த கார், மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், அந்த அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. நீதிமன்ற உத்தரவின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவினர் அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்றும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிர்சா மாவட்டம் முழுவதும் நாளை வரை செல்போன் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய படை, காவல்துறை உள்ளிட்டோரின் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது பல சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.