விமானப் பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் அவர் கடைசியாக தோழிக்கு அனுப்பிய மெசேஜ் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லுப்தான்ஸா விமானத்தில் பணிப்பெண்ணாகப் பணியாற்றியவர் அனிசியா பட்ரா (39). தெற்கு டெல்லியை சேர்ந்த இவர், கணவர் மயங்க் சிங்வியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாடியில் இருந்து கீழே குதித்தார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தற்கொலை வழக்காக டெல்லி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், விமான பணிப்பெண்ணின் தந்தையும் ராணுவ அதிகாரியுமான பத்ரா, தனது மகள் சாவுக்கு அவள் கணவர்தான் காரணம் என்றும் வரதட்சனை பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறினார். இதையடுத்து போலீசார் சிங்வியை கைது செய்து சிறையிலடைத்தனர்.
அனிசியா மற்றும் அவர் கணவர் சிங்கி ஆகியோரின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். அனிசியா, தற்கொலை செய்வதற்கு முன் தனது தோழிகள் சிலருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் தனது கணவர் அறையில் பூட்டி வைத்து கொடுமை செய்வதாகவும் இதுபற்றி போலீஸில் புகார் அளிக்கும்படியும் சிலருக்கு தகவல் அனுப்பியுள்ளார். மற்றொரு தகவலில், தன்னை கணவர் பூட்டி வைத்திருப்பதாக தோழி ஒருவருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்!
இந்நிலையில் அனிசியாவின் தோழியை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தோழி கூறும்போது, ‘அனிசியா இறப்பதற்கு முன், மதியம் 1.30 மணி அளவில் அவர் கணவர் எனக்கு போன் செய்தார். அவர்கள் பிரச்னை பற்றி தெரியும் என்பதால் நான் சமாதானம் செய்தேன். ஆனால், அவளின் கணவர் அதிக கோபமாகவே இருந்தார். போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால், அனிசியாவும் பேசினார். நீங்கள் திருமண பந்தத்தில் இருந்து பிரிய முடிவெடுத்துவிட்டால் அது தொடர்பாக வழக்கறிஞரை சந்தியுங்கள் என்று ஆலோசனை செய்தேன். பிறகு 3.56 மணிக்கு வாட்ஸ் அப்பில் அனிசியா மெசேஜ் அனுப்பியிருந்தாள். அதில் தன்னை அறையில் அடைத்து வைத்துவிட்டதாகவும் எனக்கு உதவு, போலீசிடம் சொல்’ என்றும் கூறியிருந்தாள். நான் டெல்லிக்கு வெளியே இருந்ததால் உடனடியாக உதவ இயலவில்லை. ’நீ அங்கிருந்து கிளம்பி, தோழியின் வீட்டுக்கு சென்றுவிடு’ என்று கூறினேன்.
சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து மீண்டும் மெசேஜ் வந்தது. ‘இந்த முடிவை எடுப்பதற்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன். நடந்தவற்றை இனி சரி செய்ய முடியாது’ என்று அதில் கூறியிருந்தாள். அடுத்த சில நிமிடங்களில், ’நீ உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிடு’ என்று மெசேஜ் அனுப்பினேன். அது அவளைச் சென்று சேரவே இல்லை. மனரீதியாக தைரியமானப் பெண் அவள். இறப்பதற்கு மறுநாள் அவர் பிளைட்டுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத் துணிகளை எல்லாம் எடுத்து சூட்கேஸில் வைத்திருந்தாள். கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் பிரச்னை இருந்ததால் அவரிடம் இருந்து பிரிந்து வாழ, கைலாஷ் பகுதியில் தனியாக வீடு பார்த்தும் வந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களை வைத்து அவர் தற்கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.