மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பேராயில் என்ற 26 வயது இளம்பெண், பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கில் (EY) பட்டயக் கணக்காளராகப் பணிக்குச் சேர்ந்த கொஞ்ச நாட்களில் திடீரென உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்புக்குக் காரணம் அதிகமாக வழங்கப்பட்ட பணிச்சுமையே என அவரது தாயார் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அவரது தாயார் எழுதியிருந்த கடிதம் இணையத்தில் எதிர்வினையாற்றியது. இதையடுத்து இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், மத்திய அரசு உத்தரவிட்டு அதன்பேரில் நிறுவனத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், லக்னோவிலும் பணி அழுத்தம் காரணமாக மற்றொரு பெண் ஒருவர் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதாஃப் பாத்திமா என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண், தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று, அவர் மதிய உணவு சாப்பிடச் சென்றபோது, திடீரென மயக்கமடைந்து தரையில் சரிந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
லக்னோவில் பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், அவர் கடுமையான பணி அழுத்தத்தில் இருந்ததாக, அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சித் (SP) தலைவரும் மக்களவை எம்பியுமான அகிலேஷ் யாதவ், “அனைத்து நிறுவனங்களும், அரசுத் துறைகளும் இந்த விஷயத்தில் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இதுபோன்ற திடீர் மரணங்கள் பணிச்சூழலைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. பாஜக அரசின் தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளால், நிறுவனங்களின் வணிகம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தங்கள் தொழிலைக் காப்பாற்ற, குறைவான மக்களை அதிக வேலைகளைச் செய்ய வைக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.