லக்னோ: அதீத வேலைப்பளு... பணி செய்து கொண்டிருந்தபோதே சரிந்துவிழுந்து உயிரிழந்த பெண் வங்கி ஊழியர்

லக்னோ நகரில் HDFC வங்கி ஊழியர் ஒருவர் பணிச்சுமை அதிகரித்ததால் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
HDFC Bank staff
HDFC Bank staffgoogle
Published on

கணிணி யுகத்திலும், அதிகரித்து வரும் பணிச்சுமையால் பல கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். டார்கெட்களை நோக்கி ஓடும் நிறுவனங்களால், அங்கே பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமையானது அதிகரிக்கிறது. இது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுடன், அவர்களின் உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது.

அதன்படி சமீபத்தில் லக்னோ நகரில் HDFC வங்கி ஊழியர் ஒருவர் பணிச்சுமை அதிகரித்ததால், தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து கீழேவிழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

முன்பெல்லாம் பணத்தேவை என்றால் வங்கிகளுக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று, பணத்தை பெற்று வருவோம். ஏடிஎம் வசதி வந்த பின், வரிசையில் நிற்கும் நேரமானது குறைந்தது. தேவைப்படும் போது பணத்தை எடுத்து வந்தோம். அதற்கு அடுத்தப்படியாக தற்பொழுது கூகுள் பே போன்ற செயலிகளின் உதவியால் ஏடிஎம்மிற்கு செல்லும் நேரமும் குறைந்து வருகிறது. இப்படி வங்கியானது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப எண்ணற்ற வழிகளில் செயல்பட்டு வந்தாலும் கூட, வங்கி ஊழியர்களின் பணிசுமையானது குறைவதற்கு பதிலாக அதிகரித்துதான் வருகிறது.

அதன்படி லக்னோ மாநிலத்தில் கோமதிநகரில் செயல்பட்டு வரும் HDFC வங்கியின் கிளையில் சதாப் பாத்திமா என்பவர் கூடுதல் துணைத்தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கும் பொழுது திடீரென நாற்காலியிலியில் இருந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் அதிகப்படியான பணிச்சுமைக் காரணமாக சதாப் பாத்திமா இறந்ததாக அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “இது மிகவும் கவலை அளிக்கும் செய்தியாகும். இது போன்ற செய்திகள் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் அடையாளம். அனைத்து நிறுவனங்களும் அரசுத்துறைகளும் வேலைப்பளுவைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும். இது நாட்டின் மனித வளத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார், “பொதுமக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது பாஜக. இது போன்ற திடீர் மரணங்களுக்கு பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த சிக்கலை சமாளிக்க நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகள் உடனடியாக தீர்வு காணவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com