ஐயப்பனின் முழு சாந்நித்யமும் சன்னிதியில் பரவிக் கிடக்கும் உச்ச கால பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முழுக்க முமுக்க தந்திரி மட்டுமே நடத்தும் இந்த உச்ச கால பூஜை சிறப்பு பெற்றதாகப் பார்க்கப்படுகிறது.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு பூஜையின் பலன்களையும் பெறுவதற்காக பக்தர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேநேரம், ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஊடே, காத்திருந்து தரிசனம் செய்யும் எதேச்சையான நேரத்தில் நடக்கும் சிறப்பு பூஜைகளை பக்தர்கள் தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகின்றனர். அந்த வகையில் சபரிமலையில் தினசரி நடக்கும் சிறப்புபெற்ற உச்ச பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
ஐயப்பனின் முழு சாந்நித்யமும் சன்னிதியில் பரவிக் கிடக்கும் பூஜை, உச்ச கால பூஜை எனப்படுகிறது. இந்த பூஜையை முழுக்க முழுக்க சபரிமலை தந்திரி மட்டுமே செய்வார். மதியம் 12.30 மணிக்கு நடக்கும் உச்ச பூஜை முடிந்த பின் 1.00 மணிக்கு நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
காலையில் பல மணி நேரம் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறுவதால் ஐயப்ப விக்கிரகத்தில் ஏற்படும் உஷ்ணத்தை சரிசெய்ய புஷ்ப அலங்கார பூஜைக்காக பூக்குவியல் சமர்ப்பிக்கப்படும்.