சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரிகள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தை செப்டம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி, சாலைவிதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகையை ஏற்கனவே இருந்ததைக்காட்டிலும் பல மடங்கு ரூபாய் உயர்த்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாகன ஓட்டிகளிடம் பல லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ், இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.
இதற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஈடுபட்டுள்ளன. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைக் குறைக்கவும், சுங்கக்கட்டணத்தைக் குறைக்கவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.