கட்சித் தாவல் தடை சட்டத்தில் நிறைய ஓட்டைகள் - வெங்கய்யா நாயுடு கவலை

கட்சித் தாவல் தடை சட்டத்தில் நிறைய ஓட்டைகள் - வெங்கய்யா நாயுடு கவலை
கட்சித் தாவல் தடை சட்டத்தில் நிறைய ஓட்டைகள் - வெங்கய்யா நாயுடு கவலை
Published on

கட்சித் தாவல் தடை சட்டத்தில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதால் அதில் விரைவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தின் 50-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெங்கய்யா நாயுடு பேசியதாவது:

இந்தியாவில் அரசியல் கட்சிகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது கட்சித் தாவல் தடை சட்டம். ஆனால், அந்த சட்டத்தில் ஏராளமான ஓட்டைகளும், குறைபாடுகளும் இருக்கின்றன. இதனால் ஒரு கட்சியை சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் அரசியல் ஆதாயத்துக்காகவும், பண ஆதாயத்துக்காகவும் பிற கட்சிகளுக்கு தாவுவது அதிகரித்து வருகிறது. இது மிக தீவிரமான பிரச்னையாகும். இந்த விஷயத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது. அரசியல் கட்சிகளை பாதுகாக்க கட்சித் தாவல் தடை சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

என்னை பொறுத்தவரை, ஒரு கட்சியை விட்டு செல்லும் மக்கள் பிரதிநிதிகள், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் பிற கட்சிகளில் சேர வேண்டும். அவர்கள் மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் அதில் பிரச்னை இல்லை. ஆனால் அதுவரை அவர்கள் எந்தப் பதவியிலும் இருக்கவும் கூடாது; அவர்களுக்கு புதிய பதவிகளும் வழங்கப்பட கூடாது. இதுபோன்ற திருத்தங்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறினார்.

சமீபத்திய கட்சித் தாவல்கள்...

கர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. அதிக பெரும்பான்மை இருந்ததால் பாஜக சார்பில் பி.எஸ். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. பின்னர், காங்கிரஸின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியமைத்தது.

எனினும், ஓராண்டுக்குள்ளாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவர்கள் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றனர். இதையடுத்து, கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது.

அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்.  ஆனால், ஓராண்டிலேயே காங்கிரஸை சேர்ந்த 23 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவர்கள் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து, அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com