உளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை

உளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை
உளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை
Published on

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவீரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு உளவுத் துறையின் தோல்வி காரணம் அல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது சிஆர்பிஎஃப்பின் அறிக்கை இருக்கிறது.

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்கட்ட விசாரணையை மேற்கொண்டு சிஆர்பிஎஃப் அறிக்கை தயாரித்துள்ளது. அதில் தாக்குதலில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட பல உளவுத்துறை குறைபாடுகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கமாக சொல்லப்படும் எச்சரிக்கை மட்டுமே இருந்ததாகவும், அனால் கார் மூலம் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் தொடர்பான எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எந்தவொரு உளவுத்துறை அமைப்புகளும் தாக்குதல் தொடர்பான எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கவில்லை எனவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சகமோ, உளவுத்துறை அமைப்பின் எச்சரிக்கை குறைபாடு இல்லை என ஏற்கெனவே தெரிவித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் இதுதொடர்பாக பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சரான கிஷான் ரெட்டி, “ எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளால் அளிக்கப்படும் நிதி உதவி மூலம் கடந்த 30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை மூலம் சிலர் நல் மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அனைத்து  உளவுத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்த முறைகளில் செயல்படுகின்றன. மேலும் உள்துறை அமைச்சகமும் அனைத்து அமைப்புகளுக்கும் தக்க நேரத்தில் தகவல்களை பகிர்கின்றன.” என தெரிவித்திருந்தார். புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியும் காரணம் என தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில் உள்துறை இணை அமைச்சர் ஜூன் மாதத்தில் இதனை தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது உளவுத்துறை அமைப்பின் பல்வேறு குளறுபடிகளும் காரணம் என சிஆர்பிஎஃப் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தாக்குதல் குறித்து சிஆர்பிஎஃப் தயாரித்துள்ள அறிக்கையில், வழக்கத்திற்கு மாறாக சிஆர்பிஎஃப் வீரர்களின் கான்வாய் அதிக அளவில் ஒரே நேரத்தில் சென்றதும் ஒரு காரணம் கூறப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சிஆர்பிஎஃப் வீரர்களின் கான்வாய்க்கு இடையிடையே பொதுமக்களின் வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் விசாரணை அறிக்கையில், சிஆர்பிஎஃப் வீரர்களின் கான்வாயில் இருந்த கேமராவில் பதிவான வீடியோவில், பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் தற்கொலைப் படை வாகனத்தை நிறுத்த முயற்சி செய்ததும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததும் தெரியவந்துள்ளது.

Courtesy: IndiaToday

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com