நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசும், மக்களவை சபாநாயகரும் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளனர்.
மழைக் காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. அதில் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு கோரும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கோருவதற்காக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று மாலை நடத்தவுள்ளார். இறைச்சிக்கு சந்தையில் மாடுகளை விற்கத் தடை, அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல், எல்லையில் சீனா அத்துமீறல், ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் உள்ள பிரச்னைகள் ஆகியவற்றை இந்தக் கூட்டத் தொடரில் கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.