நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகள் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என பலதரப்பட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக சி வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என கணித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்கள், பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 70 இடங்களிலும், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 8 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்துள்ள கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24, இந்தியா கூட்டணி 4 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் அங்கு மொத்தமுள்ள 48 இடங்களில் இந்தியா கூட்டணி 26 இடங்களையும், பாஜக கூட்டணி 22 இடங்களையும் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 303 இடங்களையும், காங்கிரஸ் 71 இடங்களையும் கைப்பற்றும் என இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக 2, பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் எனவும் டைம்ஸ் நவ் கணித்துள்ளது.