பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் (146) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023, மக்களவையில் இன்று நிறைவேறியது. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவானது, தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் சேவை நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டம் 1991க்கு மாற்றாக இருக்கும். இது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமனம், சம்பளம் மற்றும் நீக்கம் ஆகியவற்றை வரையறுக்கிறது. மசோதாவின் விதிகளின்படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் ஒரு தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வுக் குழுவில், பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் மிகப்பெரிய கட்சியின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.
இந்த மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சிந்தா அனுராதா, ”தேர்தல் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்” என்றார். தொடர்ந்து, மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
சட்டத்தின் கீழ், சட்டச் செயலாளர் தலைமையிலான தேடல் குழு, தேர்வுக் குழுவுக்கு பெயர்களைக் கொண்ட குழுவை முன்மொழியும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களின் சம்பளம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சமமாக இருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது இதர தேர்தல் ஆணையர்கள் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், அது எந்த நீதிமன்றத் சட்டத்தை மீறும் வகையில் இருக்காது” என்றார்.
அதேநேரத்தில், இந்த மசோதாவால், மத்தியில் ஆளும் தரப்புக்கே முழு அதிகாரமும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், புதிய மசோதவின்படி, முன்னாள், தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, பிற தேர்தல் அதிகாரிகள் அவர்கள் பணியில் இருந்தபோது கூறிய வார்த்தைகள், நடந்துகொண்ட செயல்களுக்காக அவர்கள் மீது கிரிமினல் சிவில் வழக்குகளை நீதிமன்றங்களில் தொடர முடியாது.
முன்னதாக, இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,”பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரைக்கும் நபர்களைத் தேர்தல் ஆணையர்களாகக் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்திருந்தது.