இந்தியாவின் ஜனநாயகப் பெருவிழாவில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாய்ச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கும் உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்வுக்கு, அக்கட்சி மீண்டும் சீட் வழங்க மறுத்துள்ளது. அவருக்குப் பதிலாக வீரேந்திரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில், உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சுப்ரியா, பாஜகவின் பங்கஜ் செளத்ரியிடம் வீழ்ந்திருந்தார். இந்த முறையும் மகாராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதற்குக் காரணம், பிரபல நடிகை கங்கனா ரணாவத் பாஜக சார்பில் இமாசலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அவருக்கு எதிராக சுப்ரியா ஸ்ரீநேத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின்னர் அந்தப் பதிவை நீக்கிய சுப்ரியா, அதுகுறித்து விளக்கமும் அளித்திருந்தார். அதில், ”எனது சமூக வலைதள கணக்குகளை பலரும் பயன்படுத்துகின்றனர். அதில் யாரோ மர்ம நபர்தான் மிகவும் தரக்குறைவான இந்த பதிவைப் போட்டுள்ளார். அதுகுறித்து அறிந்தவுடனே அதனை நான் நீக்கிவிட்டேன். எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும், நான் தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிக்கமாட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் பதிவை போட்டவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்திருந்த சுப்ரியாவுக்கு, இந்த சர்ச்சை பதிவு புதிய பிரச்னையை உண்டாக்கியுள்ளது. உண்மையில் அவர் களமிறக்கப்பட்டால், இந்த சர்ச்சை பதிவு, மேலும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதாலும், அது வெற்றியை பறிக்கக்கூடிய சூழலும் நிலவும் என்பதாலுமே அவருக்கு சீட் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்து அவர், ”சமூக ஊடக தலைவராக தன்னுடைய வேலையை தொடர்வதிலேயே கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால், தன்னை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று கட்சியிடம் கேட்டுக்கொண்டேன். தனக்கு பதிலாக, வேறு வேட்பாளரை அறிவிக்கும்படியும் கூறினேன்” என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், சுப்ரியாவின் சர்ச்சை பதிவு குறித்து, அவருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.