பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களிலுள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 674 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். 6 மணி நிலவரப்படி 60.8 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஐந்தாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியும் போட்டியிட்டதால் அத்தொகுதி நாட்டின் கவனத்தையே ஈர்த்துள்ளது. இது தவிர மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிட்ட லக்னோ, சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலி ஆகிய தொகுதிகளும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோரும் பீகார் மாநிலம் ஹசாரி பாக்கில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் களம் கண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் வாக்குப்பதிவை தடுக்கும் நோக்கில், அங்குள்ள ஒரு வாக்குச்சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி சென்றனர். எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டுவீச்சை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் பன்கான், ஹுக்ளி மற்றும் பராக்பூர் பகுதிகளிலும் ஆங்காங்கே சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பாராக் போர் என்ற பகுதியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில், பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங்கை, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென தாக்கினர். மேலும் பொதுமக்களையும் வாக்களிக்கக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த துணை ராணுவப் படை வீரர்கள் அர்ஜுன் சிங்கை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இதே போல் பீகாரின் சரண் தொகுதிக்குட்பட்ட சாப்ராவில், ஒரு வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த மின்னணு வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கி கீழே வீசியதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவரது பெயர், ரஞ்சித் பஸ்வான் எனத் தெரியவந்தது.
பீகாரின் சரண், மதுபானி, சீதாமர்ஹி, முசாஃபர்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதே போல் பீகாரில் முங்கர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளில் ஈடுபட முயன்றதாக 20 தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை, தலைமை தேர்தல் அதிகாரி அதிரடியாக தற்காலி பணி நீக்கம் செய்தார். முறைகேடுகளில் ஈடுபட முயன்றதை படம்பிடித்த தொலைக்காட்சி நிருபர்கள் சிலரையும் தேர்தல் அதிகாரிகள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.