முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்

முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்
முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்
Published on

மக்களவைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை நாளை எண்ணி முடிப்பதில் வழக்கத்தைவிட கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்றும் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படலாம் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 விவிபேட் எந்திரங்களிலுள்ள பதிவுச் சீட்டுகளை மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் ஒப்புநோக்குவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் ஒரேயொரு விவிபேட் இயந்திரத்தின் பதிவுச் சீட்டுகள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளுடன் சரி பார்க்கப்படுவது வாடிக்கை. ஆனால் இம்முறை இது மாறுகிறது. 

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20,000 விவிபேட் இயந்திரங்களில் உள்ள பதிவுச் சீட்டுகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு
 செய்யப்பட்டிருக்கும் வாக்குகளோடு அதனை ஒப்புநோக்க வேண்டியிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலிலே விவிபேட் இயந்திரத்திலுள்ள பதிவுச் சீட்டுக்கள் எண்ணப்படும் என்றும் அதற்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது தெரிந்து கொள்ளப்படும். தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஒருவேளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவிபேட் பதிவுச் சீட்டுகளின் எண்ணிக்கையில் இருந்து வித்தியாசமானால், விவிபேட் இயந்திரத்தில் பதிவாகி உள்ள பதிவுகளின் எண்ணிக்கை இறுதி எண்ணிக்கையாக எடுத்துக் கொள்ளப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தேர்தல் முடிவுகள் மாலைக்குள் வெளிவரும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாளை விவிபேட் எண்ணிக்கை இணைந்திருப்பதால், முடிவுகளை அறிவிக்க இரவு வரை ஆகிடும் எனத் தேர்தல் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் தொடுத்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விவிபேட் சரிபார்ப்பு ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய கூடுதல் தகவல். விவிபேட் வாக்குகளை தவிர, தபால் ஓட்டுகளையும் எண்ணி முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என அதிகாரிகள் கருதுகிறார்கள். நாடு முழுவதும் பதிவாகியுள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 16.5 லட்சம், நாடு முழுவதும் மொத்தம் 18 லட்சம் தபால் வாக்குகளில், 16.5 லட்சத்துக்கு மேல்
 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். 

தேர்தல் பணியில் ஈடுபடும் இராணுவத்தை சேர்ந்தவர்கள், துணை இராணுவத்தை சேர்ந்தவர்கள், போலீசார் மற்றும் அரசு
அதிகாரிகளுக்கு தபால் வாக்குப் பதிவு செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவிபேட் இயந்திரங்களில் உள்ள பதிவுச் சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும் என்றால் தேர்தல் முடிவுகள் வெளி வருவதில் பல நாட்கள் தாமதம் ஏற்படும் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள். 

இந்தக் காரணத்தால் எதிர்க்கட்சிகள் அவ்வாறு செய்ய வேண்டும் என்று நேற்று அளித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2019 ஆம் வருட மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 96 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தன. இதில் கிட்டத்தட்ட 60 கோடி பேர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது 67 சதவிகிதம் வாக்குப்பதிவை வைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணித்து இருக்கும் எண்ணிக்கையாகும்.

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தவிர மீதமுள்ள 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8000. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com