பயத்தால் ஈவிஎம் இயந்திரங்கள் மீது எதிர்கட்சிகளுக்கு சந்தேகம் - அமித் ஷா

பயத்தால் ஈவிஎம் இயந்திரங்கள் மீது எதிர்கட்சிகளுக்கு சந்தேகம் - அமித் ஷா
பயத்தால் ஈவிஎம் இயந்திரங்கள் மீது எதிர்கட்சிகளுக்கு சந்தேகம் - அமித் ஷா
Published on

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில்தான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, வாக்குகளை பிறகு எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. வாக்குகளை முதலில் எண்ணிவிட்டு பின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என கூறியுள்ளது. 

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இத்தகைய கோரிக்கையை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “வாக்கு எண்ணும் நடை முறையை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் அதை அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்க வேண்டும்.

6 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதும், இந்த போராட்டங்களை எதிர்கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

எனவே தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றனர். அவர்கள் புகாரில் உண்மையில்லை, சுயநலம் அடங்கி இருக்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை எப்படி கேள்வி எழுப்ப முடியும்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவில்லையா?

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 70 இடங்களில் 67 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் சமீபத்தில் மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. அப்போது நாங்கள் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அப்படி வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை என்றால், அந்த தேர்தல்களுக்கு பின்னர் நீங்கள் ஏன் அரசு அமைத்தீர்கள்? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமான தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அது தேர்தல் வெற்றி என்றும், தோல்வியடைந்தால் அதற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் காரணம் என்றும் கூற முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com