மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவ் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று சமாஜ்வாதி கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 3 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உ.பி. முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவ். அதன்படி கன்னோஜ் தொகுதியில் டிம்பிள் போட்டியிட உள்ளார்.
இவர் ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். இதுதவிர சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் மணிபூரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
கூட்டணியில் சமாஜ்வாதி கட்சிக்கு 37 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.