சீனத்தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகம் லோகோ டிசைன் போட்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தூதரக உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகம் லோகோ டிசைன் போட்டியை நடத்துகிறது. லோகோ டிசைன் கருப்பொருள் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாறு மற்றும் கலாச்சார உறவுகளை (Historic and cultural connections) வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இரு நாட்டு மக்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றங்கள், இரு நாட்டு முக்கியமான சின்னங்கள் ஆகியவற்றை லோகோவில் கொண்டுவரலாம்.பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு இந்தியர்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். லோகோவானது உங்களின் சொந்த கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். மூன்றாம் நபரின், குழுவின், நிறுவனத்தின் லோகோவாக இருக்கக் கூடாது.
தனி நபராகவோ, குழுவாகவோ இந்த லோகோ டிசைன் போட்டியில் கலந்து கொள்ளலாம். லோகோவை வரைந்து முடித்தபின்பு, அது குறித்த விளக்கத்தையும் ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பும் லோகோ டிசைனில் வாட்டர் மார்க், கையெழுத்து, பிற சிம்பல்கள் எதுவும் இருக்கக்கூடாது. டிசைனை ஜேபிஜி (பிக்சர்) ஃபார்மேட்டில் சமர்ப்பிக்க வேண்டும். 3500 பிக்சல் X 2400 பிக்சல் நீள, அகலம் கொண்டதாகவும், 2 MB-க்குள்ளும் இருக்க வேண்டும்.
லோகோவை அனுப்பும்போது, உங்களின் பெயர், வயது, தொடர்பு முகவரி மற்றும் லோகோ குறித்த விளக்கம் ஆகியவற்றை மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும். இறுதியாகத் தேர்வு செய்யப்படும் லோகோ டிசைன்களுக்கு பரிகள் உண்டு. லோகோவை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: press.beijing@mea.gov.in
லோகோவை அனுப்ப கடைசி தேதி: 20.01.2020
-மோ.கணேசன்