படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி!!

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி!!
படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி!!
Published on

லோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவில் பெருகி வருவதால், நாட்டின் விவசாய உற்பத்தி பெரும் பாதிப்பை சந்திக்கலாம் எனப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தாமல் இருந்தால், விவசாயப் பொருட்கள் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வெட்டுக்கிளிகளிடம் இருந்து காப்பதற்காக மகாராஷ்டிரா அரசு பயிர்கள் மீது வேதியியல் திரவத்தை தெளிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது வெட்டுக்கிளியிடம் இருந்து காக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள வேளாண் துறை இணை இயக்குநர் ரவீந்திர போசேல், வெட்டுக்கிளிகள் இரவில் பறக்காது. பகலில் மட்டுமே பறக்கும். காற்று திசைக்கு ஏற்ப அவை பறக்கின்றன. எந்த வகையான தாவரத்திற்கும் வெட்டுக்கிளிகள் அபாயமானவை தான்.பச்சை இலைகளை இவை உணவாக உட்கொண்டு பயிரையே அழித்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் படையெடுத்த வெட்டுக்கிளிகள், ஏப்ரல் 11வாக்கில் ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தன.நேற்று ஜெய்ப்பூரின் குடியிருப்பு பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள் தென்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் மதுரா பகுதி வெட்டுக்கிளிகளை சமாளிக்க தயாராகி வருகிறது.

200 லிட்டர் குளோரோபிரிபோஸ் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்டத்திற்கு வெளியே ரசாயன பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மருந்து தெளிக்கும் வசதியுடன் 12 டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தீயணைப்புத்துறையினர் தயார் நிலையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த வாரம் விடுத்த எச்சரிக்கையின்படி, வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகியப்பகுதிகளில் படையெடுக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தது. மேலும் டெல்லிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த வருடம் இந்திய விவசாயத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும் ஐநா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com