நடிகர் சூர்யா நடித்த "காப்பான்" படத்தில் வரும் காட்சிப்போல ராஜஸ்தானில் ஒரு வீட்டின் மாடி முழுவதையும் வெட்டுக்கிளிகள் ஆக்கிரமித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
லோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் விவசாயப் பயிர்களை சேதம் செய்து வருகின்றன. இதனால் அந்நாட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவில் பெருகி வருவதால், நாட்டின் விவசாய உற்பத்தி பெரும் பாதிப்பை சந்திக்கலாம் எனப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தாமல் இருந்தால், விவசாய பொருட்கள் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வெட்டுக்கிளிகள் ஒரு இடத்தில் கூட்டமாக கூடினால், எந்த அளவிற்கு அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதற்கு உதாரணமாக தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியை மொத்தமாக லோஸ்கட் வெட்டுக்கிளிகள் ஆக்கிமிரத்துள்ள வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.