ஊரடங்கால் சுற்றுச்சூழல் மாசு குறைந்து வானம் தெளிந்திருக்கும் நிலையில், காஷ்மீரில் இருக்கும் பீர் பஞ்சால் மலைத்தொடர்கள் தெளிவாகத் தென்படுகின்றன.
ஸ்ரீநகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் பீர் பஞ்சால் மலைத்தொடர்களைத் தெளிவாகக் காண முடியாது. வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை, காற்று மாசு ஆகியவை காரணமாக தூசு மண்டலங்கள் மலைத்தொடரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்திருந்தன.
தற்போது ஊரடங்கால் ஒட்டுமொத்த உலகிலும் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் காற்று மாசு குறைந்திருப்பதாக அமெரிக்காவின் நாசா செயற்கைக்கோள் புகைப்படத்துடன் சுட்டிக் காட்டியிருந்தது. இதன் காரணமாக ஸ்ரீநகரிலிருந்து பீர் பஞ்சால் மலைத் தொடர், தற்போது வெறும் கண்களால் பார்க்கும் அளவுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தவாறே இமயமலையின் ஒரு பகுதியாக இருக்கும் தால் ஆதர் மலையைக் கண்டு ரசிக்கின்றனர். பல இளைஞர்கள் தற்போது தான் முதன்முதலாக தால் ஆதர் மலையை வீட்டிலிருந்து பார்ப்பதாகச் சொல்கின்றனர். கிட்டத்தட்ட ஜலந்தர் பகுதியிலிருந்து அந்த மலைத்தொடர் 200கிமீக்கு அப்பால் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிட்டத்தட்ட 30ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதி மக்களுக்கு தால் ஆதர் மலை காட்சி தருவதாகக் கூறப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை என்றாலும், வீட்டு வாசலில் நின்றுகொண்டே இமயமலையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.