உத்தர பிரதேச மாநிலத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 40 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பெர்சியா துவா கிராமத்தில் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு வழக்கம் போல நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்ட மாணவர்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே வயிற்றுவலியால் துடித்தனர். சிலருக்கு வாந்தி எடுத்தது. பின்னர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உணவை சோதித்தபோது, அதில் பல்லியின் வால் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பதற்றமான ஆசிரியர்கள் உடனடியாக அவர்கள் அனைவரையும் விந்தியாச்சலில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மொத்தம் 90 மாணவர்கள் அங்கு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 45 மாணவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.