ப்ளூம்பெர்க் என்ற பொருளாதார ஊடகத்தின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியர்களில் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் சாவித்ரி தேவி ஜிண்டால் 7ஆம் இடம் பிடித்துள்ளார். ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கவுரவ தலைவரான இவர், சன் பார்மாவின் திலீப் சங்வி, D-mart நிறுவனத்தின் ராதாகிருஷ்ணன் தாமினி, ஆர்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் பெற்றுள்ளார்.
ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை சாவித்ரி தேவி ஜிண்டால் கொண்டிருக்கும் நிலையில், ஒரு லட்சத்து 52 ஆயிரம் கோடி, அதாவது ஆயிரம் கோடி ரூபாய் குறைவான சொத்து மதிப்புடன் திலீப் சங்வி 8ஆவது இடத்தில் உள்ளார். 73 வயதாகும் சாவித்ரி தேவி ஜிண்டாலுக்கு கடந்த நிதியாண்டான 2022-23ல் மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக சொத்து சேர்ந்துள்ளது. மாறாக, பட்டியலில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4 ஆயிரத்து 436 கோடி ரூபாய் சரிவு கண்டிருக்கிறது.
முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய். 2ஆம் இடத்தில் இருக்கும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 17 ஆயிரம் கோடி. ஷபூர் பலோன்ஜி மிஸ்திரி 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் மூன்றாம் இடத்திலும், ஷிவ் நாடார் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் நான்காம் இடத்திலும் இருக்கின்றனர்.
ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் ஆசிம் பிரேம்ஜி ஐந்தாம் இடத்திலும் ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயுடன் சைரஸ் பூனாவாலா, ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சாவித்ரி தேவி ஜிண்டால் முறையே 6 மற்றும் 7ஆவது இடம் வகிக்கின்றனர். எட்டாவது இடத்தில் உள்ள திலீப் சங்விக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயுடன் ராதாகிருஷ்ணன் தாமினி 9ஆம் இடத்திலும் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயுடன் லட்சுமி மிட்டல் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.