மொபைல் நம்பருடன் ஆதாரை இணைக்க புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மொபைல் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம் அடுத்த வருடம் பிப்ரவரி 6ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டியதிருப்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அதை போக்கும் வகையில், மொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபற்றி ஆதார் ஆணையத்தின் சிஇஓ, அஜய் பூஷண் பாண்டே கூறும்போது, ’செல்போன் சந்தாதாரர்கள் தங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதிகளை மொபைல் போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றன. ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்ட் அளிக்கும் முறை, மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை ஆகிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் எளிதாக ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள் டிசம்பர் 1 -ம் தேதி முதல் அமலுக்கு வரும்’ என்றார்.