“22 ஆண்டுகளாக நாட்டிற்கு பாடுபட்டேன்.. ஆனால் எனக்கே..”- வேதனையில் சிஆர்பிஎஃப் வீரர்..!

“22 ஆண்டுகளாக நாட்டிற்கு பாடுபட்டேன்.. ஆனால் எனக்கே..”- வேதனையில் சிஆர்பிஎஃப் வீரர்..!
“22 ஆண்டுகளாக நாட்டிற்கு பாடுபட்டேன்.. ஆனால் எனக்கே..”- வேதனையில் சிஆர்பிஎஃப் வீரர்..!
Published on


டெல்லி வன்முறையில் சிஆர்பிஎப் வீரரின் வீடு தீக்கு இரையாக்கப்பட்டிருக்கிறது. 

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்‌றது. இதனையடுத்து அதன் மறுநாள் அதே இடத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. அப்போது இரு அமைப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் சிறிது நேரத்தில் டெல்லியின் பல இடங்களில் பரவி கலவரமாக வெடித்தது. இந்த கலவரம் நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கோர நிலையை கட்டுக்குள்‌ கொண்டுவ‌ர காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது அமைதியை காண தொடங்கியுள்ளன.

இந்த வன்முறையில் 46-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது இந்நிலையில் டெல்லி வன்முறையில் தனது வீட்டை இழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் (Aish Mohammad ) ஆய்ஷ் முகமது, டெல்லி வன்முறையின் மூலம் இந்திய நாட்டில் வாழ்வதற்கு தனக்கு உரிமை இல்லை என்பதை தெரிந்து கொண்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் பஹிரதி விஹார் நகரத்தை சேர்ந்தவர் ஆய்ஷ் முகமது (58). சி.ஆர்.பி.எஃப் வீரரான இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நடந்த டெல்லி வன்முறையின்போது ஆய்ஷ், தனது 26 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது 200-க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கற்கள், துப்பாக்கி, கம்பிகள் ஆகியவற்றோடு அவரது வீட்டிற்குள் பயங்கர சத்தத்துடன் நுழைந்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆய்ஷ், தனது மகனுடன் வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து அருகில் உள்ள வீட்டில் குதித்து தப்பியுள்ளார். இதனையடுத்து வீட்டில் உள்ள நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்த வன்முறையாளர்கள் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் வீட்டிற்கு தீயும் வைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்து தப்பிய ஆய்ஷ், டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது “ நான் 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

1991-ஆம் ஆண்டு காஷ்மீரில் பணியாற்றியபோது காயமடைந்தேன். தற்போது டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இந்த வன்முறையின் மூலம் எனக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். பாதுகாப்பு கருதி எனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை எனது சொந்த ஊரான புலந்த்ஷாகருக்கு அனுப்பி விட்டேன்.

கம்பிகளுடன் வீட்டிற்குள் நுழைந்த வன்முறையாளர்கள் எனது சகோதரி மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகளை திருடி சென்றுவிட்டனர். அவர்கள் வைத்த தீயில் எனது வீட்டின் முதல் தளமும், இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாகிவிட்டது. தற்போது மீதம் இருந்த கொஞ்சம் பொருட்களை வைத்து இங்கு தஞ்சம் அடைந்திருக்கிறேன்” என்று கூறினார்.
---------------------

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com