கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி டெல்லியில் இருந்து தனியார் வங்கியின் பயிற்சிக்காக பெண் ஒருவர் கும்பகோணத்திற்கு ரயிலில் வந்துள்ளார். அப்போது ரயிலில் இருந்து இறங்கி விடுதிக்கு செல்வதற்காக ஆட்டோ ஏறியுள்ளார். ஆனால் ஆட்டோ நீண்ட நேரம் சுற்றிக்கொண்டே இருந்ததால் அந்த பெண் தனது தோழிக்கு போன் செய்து ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விடுதிக்கு எவ்வளவு நேரம் எனக் கேட்டுள்ளார். அங்கிருந்து விடுதி பக்கம்தான் என தோழி சொல்லவும் ஆட்டோ ஓட்டுநருடன் டெல்லி பெண் சண்டையிட்டுள்ளார்.
இதனால், நடுவழியில் ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு சாலையில் போதையில் நின்றுகொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி உட்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், வன்கொடுமை செய்த 4 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனையும் வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையில் இருந்து 2 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.