2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டிண்டர் செயலியில் துஷ்யந்த் என்பவருக்கும் ப்ரியா சேத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் திருமணமான துஷ்யந்த் தான் ஒரு தொழிலதிபர் என கூறி விவான் கோஹ்லி என்ற பெயரில் ப்ரியா உடன் பழகியுள்ளார். மறுபுறம் ப்ரியா சேத் துஷ்யந்திடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்திலேயே பழகி வந்துள்ளார். 3 மாத பழக்கத்திற்கு பின் இருவரும் நேரடியாக சந்திக்கலாம் முடிவு செய்துள்ளனர்.
ப்ரியா சேத் அவரை வாடகை விடுதிக்கு அழைத்துள்ளார். துஷ்யந்த் அங்கு சென்றதும் தனது கூட்டாளிகளின் உதவியுடன் துஷ்யந்தை ப்ரியா கடத்தியுள்ளார். இதன் பின்பே துஷ்யந்த் தொழிலதிபர் இல்லை என தெரிய வந்துள்ளது. ஆனாலும் துஷ்யந்த் வீட்டை தொடர்பு கொண்டு 10 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணத்தை உடனடியாக துஷ்யந்த் வங்கிக் கணக்கில் செலுத்த சொல்லியுள்ளனர்.
ஆனால், மாலைக்குள் 3 லட்ச ரூபாயை துஷ்யந்தின் தந்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்த முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் அதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் துஷ்யந்த் கொலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அவரது உடல் ஒரு சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் தீபிகா நாராயணன் பரத்வாஜ் உடனான உரையாடலில் ப்ரியா சேத் கூறியதாவது, “துஷ்யந்த் பணக்காரர் என பொய் சொன்னார். நான் திக்ஷந்த் உடன் லிவ் இன் உறவில் இருந்தேன். அவருக்கு 21 லட்சம் கடன் இருந்தது. அவரைக் கடத்தி பணம் பெற முயற்சித்தோம். ஆனால் அவரிடம் ஏதும் இல்லை என்பது பின்பு தான் தெரிய வந்தது” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அதில், “குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் வைக்கப்பட்டுள்ளது, அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள், ஆதாரங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தது. குற்றவாளிகளான ப்ரியா சேத் மற்றும் அவரது கூட்டாளிகளான திக்ஷந்த் கம்ரா, லக்ஷ்மா வல்லா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
துஷ்யந்தின் தந்தை மற்றும் குற்றவாளிகள் அளித்துள்ள நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.