மது அருந்துவதால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் தனிநபர் வாழ்நாள், சராசரியாக 75 நாட்கள் குறையும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவர்கள் மூன்று பேர் மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் 2 பேர் இணைந்து 2011 முதல் 2050 வரை இந்தியாவில் மதுவின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வறிக்கையை சர்வதேச மருந்து கொள்கை இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுப்பழக்கத்தால் சராசரி வாழ்நாள் இரண்டரை மாதங்கள் குறைவதாகவும், மது தொடர்பான சிகிச்சை, மறுவாழ்வு செலவால் பொருளாதார வளர்ச்சியில் ஆண்டுக்கு 1.45 சதவிகித பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மதுப்பழக்கத்தால் சந்திக்கும் உடல்நல பாதிப்புகளில் இருந்து மீள 5 கோடியே 70 லட்சம் இந்தியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மதுப் பழக்கத்தால் ஏற்படும் பணி பாதிப்பு, உற்பத்தி இழப்பு, உயிரிழப்புகளால் 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு 97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மது விலக்கு மற்றும் சரியான சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டால், இதே காலகட்டத்தில் பாதியளவு இழப்பை தவிர்க்க முடியும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.