இந்தியா சுதந்திரமடைந்த பிறகும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கும்நாமி பாபா என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் தகவலை உறுதி செய்யும் விதமாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்
சுதந்திர போராட்ட காலத்தில் இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆயுதங்களை தாங்கி புரட்சிப் படைகளை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக ஜப்பான் உதவியுடன் போர் தொடுத்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945 ஆம் ஆண்டில் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், அந்த விபத்திலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் உயிர்தப்பியதாகவும், பின்னர் இந்தியா வந்து, உத்தரபிரதேசத்தின் பைசாதாபாத் நகரில் கும்நாமி பாபாவாக வாழ்ந்ததாகவும் நம்பப்படுகிறது. இது குறித்து கலவையான கருத்துகள் சொல்லப்பட்டு வரும் நிலையில் கும்நாமி பாபாவின் கையெழுத்தை ஆய்வு செய்தால் உண்மை தெரியும் என நம்பப்பட்டது.
இதனை அடுத்து கையெழுத்து பிரதிகளை ஆய்வு செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் கார்ல் பகத்தெடிடம் நேதாஜி மற்றும் கும்நாமி பாபா ஆகியோர் எழுதிய கையெழுத்து பிரதிகள் ஒப்படைக்கப்பட்டன. இதை ஆய்வு செய்த அவர், இரு கையெழுத்து பிரதிகளும் ஒரே நபர் எழுதியதுதான் என தெரிவித்துள்ளார்.