மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கொள்கைகளால், இந்தியாவில் உயிர்காக்கும் மருந்துகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிகிறது. இந்திய ரயில்வே துறையின் கடிதம் ஒன்றின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே தயாரிக்கப்படும் உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை, குறிப்பாக கோவிட் -19, புற்றுநோய் போன்றவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளை வாங்கி விநியோகிப்பதற்கான விலக்கு கோரி, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சமீபத்திய 'மேக் இன் இந்தியா' கொள்கையின் காரணமாக மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபரகரணங்களை வாங்குவதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை வெளிப்படுத்தி, ரயில்வே வாரியத்திற்கு முறையாக கடிதம் எழுதிய வடக்கு ரயில்வே இந்தப் பிரச்னையை முதன்முதலில் 2020 ஆகஸ்ட் மாதமே வெளிக்கொணர்ந்தது.
"இந்த மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் விநியோகச் சங்கிலி மனித உயிர்காக்கும் பிரிவில் இன்றியமையாதவை. அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் திருப்திகரமான சுகாதார சேவை வழங்கப்படுகிறது. தற்போதுள்ள 'மேக் இன் இந்தியா' கொள்கையில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, இதுபோன்ற மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் 'உள்ளூர் அல்லாத சப்ளையர்களிடமிருந்து' வாங்கி விநியோகிப்பதற்கான விலக்கு கோர உத்தேசிக்கப்பட்டுள்ளது" என்று ரயில்வே எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வே, அனைத்து மண்டலத் தலைமையகங்களிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உட்பட சுகாதார உள்கட்டமைப்பின் சொந்த வலைப்பின்னலைக் கொண்டுள்ளது.