தீபாவளி மாதம் பிறந்துவிட்டாலே, குழந்தைகளுக்கு பட்டாசு, புது துணி, இனிப்புகள் குறித்த நினைவுகளே ஒருபுறம் குஷியை கொடுத்துவிடும்..அதேசமயம், வேலை செய்யும் பெற்றோர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பது என்னவென்று தெரியுமா? போனஸ்...
பெரும்பாலான நிறுவனங்களில் வழங்கப்படும் இந்த போனஸ்தான், பல குடும்பத்தின் பல நாள் கனவை நிறைவேற்ற உதவியாக இருக்கும்.. சரி, இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது? இது குறித்த சுவாரஸ்யமான தகவல் என்ன பார்க்கலாமா?
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, வார சம்பள முறை (ஒவ்வொரு வாரமும் சம்பளம்; அதாவது வருடத்திற்கு 52 வாரங்கள்) , மாத சம்பள முறையாக (4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம்; அதாவது 12×4=48 வாரங்கள்) மாற்றப்பட்டது. பெரும்பாலான மாதங்களில் 4 வாரம் போக, கூடுதலாக 1-3 நாட்கள் வரை இருக்கும். இப்படி ஒவ்வொரு மாதத்திலும் மீதமாகும் நாட்களை கணக்கில் கொண்டால், அதுவே இன்னொரு மாதத்துக்கான அளவு வரும். இந்தத் தொகையே, போனஸாக வழங்கப்படுகிறது.
இந்த போனஸ் நடைமுறையை ஆங்கிலேய அரசு தர மறுத்ததால், 1930-ம் ஆண்டிலிருந்து சுமார் 10 ஆண்டுகளாக மகாராஷ்ட்ராவில் உள்ள பல்வேறு தொழிலாளர் நல சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக தீபாவளி / தசரா போன்ற பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால், அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக 1940-ல், ஜூன் 30-ம் தேதி முதன்முதலில் இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது.
ஆக போனஸ் என்பது விடுபட்ட கொடுக்கப்படாத நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்.