பாஜகவின் ஆணவத்தை முறியடிக்க ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பருச்சில் இன்று நடைபெற்ற ஆதிவாசி சங்கல்ப் மகாசம்மேளனில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "குஜராத் குறித்து தனது கட்சி கவலைப்படவில்லை என்று பாஜக நபர் ஒருவரே என்னிடம் கூறினார். குஜராத்தில் உள்ள 6.5 கோடி மக்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், எங்கள் ஆட்சி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறை எங்களை தூக்கி எறியுங்கள்
குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கேள்விப்படுகிறேன். ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக பயப்படுகிறதா? டிசம்பர் வரை அவர்கள் எங்களுக்கு நேரம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் கடவுள் நம்முடன் இருக்கிறார், இப்போதே தேர்தல் நடத்துங்கள் அல்லது 6 மாதங்களுக்கு பிறகு நடத்துங்கள் எப்படி என்றாலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும்" என தெரிவித்தார்
ஆளும் பாஜக கட்சி பணக்காரர்களுடன் மட்டுமே உள்ளது என்று குற்றம் சாட்டிய கெஜ்ரிவால்,மாநிலத்தில் ஆதிவாசிகளின் ரத்தத்தை அக்கட்சி உறிஞ்சுவதாகவும் கூறினார். மேலும், குஜராத் பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீலைத் தாக்கி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "6.5 கோடி மக்களிடமிருந்து ஒரு குஜராத்திக் கூட பாஜக மாநிலத் தலைவராக கிடைக்கவில்லையா ? இது குஜராத் மக்களை அவமதிக்கும் செயல். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் குஜராத் ஆட்சியை நடத்துவாரா " என தெரிவித்தார்
காங்கிரஸையும் விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால், "காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது. இருப்பினும், காங்கிரஸில் நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் குஜராத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால், எங்களுடன் சேருங்கள், பாஜகவில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குஜராத்திற்கு நல்லது செய்ய விரும்பினால் எங்களுடன் சேருங்கள். அவர்கள் பாஜகவுடன் இருந்தால் எதுவும் நடக்காது" என தெரிவித்தார்
இதையும் படிக்க:'சமஸ்கிருதம் தேசியமொழி': அஜய் தேவ்கன், சுதீப்பின் இந்தி சர்ச்சையில் கங்கனா ரனாவத் கருத்து