உத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நரேந்திரா நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை ஒன்று ஏழு வயது சிறுமியை கொன்றுள்ளது.
“நரேந்திரா நகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது அந்த சிறுமியின் வீடு. சம்பவத்தன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் வீட்டுக்கு வெளியே அமைந்துள்ள கழிவறையை பயன்படுத்த சிறுமி வீட்டை விட்டு வெளிவந்துள்ளார்.
அந்த சமயத்தில் சிறுத்தை அந்த சிறுமியை தாக்கியுள்ளது. சில நொடிகளில் வனப்பகுதிக்குள் சிறுமியை கவ்வியபடி சிறுத்தை இழுத்து சென்றுள்ளது.
தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன் வனத்திற்குள் தேடுதல் வேட்டையை தொடங்கினோம். ஆனால் நாங்கள் மீட்பதற்குள் அந்த சிறுமி உயிரிழந்திருந்தார்.
அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது” என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் மக்கள் அந்த சிறுத்தையை ஆட்கொல்லி பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். உத்தராகண்டில் கடந்த 30 நாட்களில் ஐந்து சிறுவர் - சிறுமியர் சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்துள்ளனர்.