ஹரியானா மாநிலம் பானிபட்டில் சிறுத்தையைப் பிடிக்கும் மீட்புப் பணியில் இருந்த ஒரு காவலர் மற்றும் இரண்டு வனத்துறை அதிகாரிகளை திடீரென சிறுத்தை தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பானிபட் போலீஸ் சூப்பிரண்டு ஷஷாங்க் குமார் சவான் சிறுத்தை தாக்குதலின் வீடியோ கிளிப்பை ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில், மீட்புக் குழு உறுப்பினர்களை திடீரென சிறுத்தை பாய்ந்து தாக்குகிறது, பின்னர் உடனடியாக வெற்றிகரமாக அந்த சிறுத்தை அவர்களால் அமைதிப்படுத்தப்பட்டது. இந்த ட்வீட்டில் ஷஷாங்க் குமார் சவான், " மக்களுக்கான பணியில் காவலர்கள் மற்றும் வனத்துறையினருக்கு சவாலான நாள் இன்று. இந்த சிறுத்தை தாக்குதலில் சில அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன், இறுதியில் சிறுத்தை உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" எனத் தெரிவித்தார்
சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் சிறுத்தையைப் பிடிக்க அமைக்கப்பட்ட மீட்புக் குழுவை சேர்ந்த சனோலி காவல் அதிகாரி ஜக்ஜித் சிங், பானிபட் வனத்துறை ரேஞ்சர் வீரேந்தர் கஹ்லியான் மற்றும் வனத் துறையின் கால்நடை மருத்துவர் அசோக் காசா ஆகிய மூவரும் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, சிறுத்தையைக் கண்ட பெஹ்ராம்பூர் கிராமவாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வனத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் சிறுத்தை அவர்களை தாக்கியது.