மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ஒற்றை இலக்கத் தொகுதிகளிலேயே வென்றுள்ளன. இதனால் அக்கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் முதல் மக்களவை தேர்தல் தொடங்கி தற்போது வரை போட்டியிட்டு வரும் வெகுசில கட்சிகளில் ஒன்று என்ற பெருமை இடதுசாரிக் கட்சிகளுக்கு உண்டு. 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 22 இடங்களில் வென்ற இடதுசாரிக் கட்சிகள் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் சுமார் 40 முதல் 60 இடங்களை தவறாமல் கைப்பற்றி வந்தன.
எனினும் இந்த எண்ணிக்கை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கி சரிவுப் போக்கிலேயே இருந்து வருகிறது. 2004 தேர்தலில் 59 தொகுதிகளையும் 2009 தேர்தலில் 24 தொகுதிகளையும் வென்ற இடதுசாரிக் கட்சிகள் கடந்த முறை 12 தொகுதிகளில் வென்றன. இந்நிலையில் தற்போதைய மக்களவை தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 273 தொகுதிகளில் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் அதிகபட்சமாக 71 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் 54 தொகுதிகளிலும் களமிறங்கின. ஆனால் அக்கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தற்போது வென்றுள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள 4 தொகுதிகளும் அடங்கும். இந்தியாவில் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் எட்டியுள்ள மிகவும் கீழான நிலையாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மத்திய அரசு அமைவதில் பல முறை இடதுசாரிக் கட்சிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. 1998-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் மேற்கு வங்க முதல்வருமான ஜோதிபாசுவுக்கு பிரதமர் பதவி கிடைக்கும் சூழல் ஏற்படுமளவுக்கு அக்கட்சி வலுவாக இருந்தது. ஆனால் தற்போது மேற்கு வங்காளத்திலும் திரிபுராவிலும் ஏற்கெனவே ஆட்சியை இழந்து விட்ட இடதுசாரிகள் கேரளாவில் மட்டும் ஆட்சியில் உள்ளனர். இந்த சரிவு இடதுசாரிகள் தங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது என்பது நிதர்சனம்.