கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லீடர் ராமையா என்கிற தலைப்பில் உருவாகும் இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. ‘கதலேகானா' என்கிற படத்தை இயக்கிய, இயக்குநர் சத்யா ரத்னம் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தமாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றியவுடன் முதல்வர் யார் என்கிற எதிர்பார்ப்பு கர்நாடகாவைத் தாண்டி பல மாநிலங்களில் பற்றிக்கொண்டது. சித்தாரமையாவா அல்லது டி.கே.சிவக்குமாரா என்கிற விவாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இள வயதினர்கூட டி.கே.எஸ்ஸின் பக்கமே நின்றனர். ஆனால், அரசியல் விபரம் புரிந்தவர்கள், காங்கிரஸைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் சித்தராமையாதான் முதல்வர் ஆவார் என அடித்துச் சொன்னார்கள். அவர்கள் சொன்னமாதிரியே, சித்தராமையாதான் கர்நாடகாவின் முதல்வரானார். அப்படி அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், சித்தராமையாதான் முதல்வர் என அழுத்தமாக சொன்னதன் காரணம், அவர் ஒரு ‘மாஸ் லீடர்’ என்பதுதான். ஆமாம், சித்தராமையா கர்நாடகாவின் மாஸ் லீடர்தான். அப்படியான மாஸ் லீடரின் பயோக்கில்தான் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மிக எளிய பின்புலத்தில் இருந்து அரசியலுக்கு வந்து இன்று கர்நாடகாவின் மக்கள் தலைவராக மிளிரும் சித்தராமையா கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்...
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் திராவிடக் கருத்தியல், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வழியாக அரசியல் களத்துக்கு வந்தவர்கள் ஏராளம். ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே இன்று இந்திய அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பல்வேறு தலைவர்கள் எமெர்ஜென்சி, அதனைத் தொடர்ந்த சோசலிச எழுச்சியின் காரணமாகத் தீவிர அரசியலுக்கு வந்தவர்கள். லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பஸ்வான் என இந்தப் பட்டியல் மிகப்பெரியது. அந்தவரிசையில் கர்நாடகாவில் சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர்தான் சித்தராமையா.
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள சித்தராமனஹுண்டி எனும் கிராமத்தில் 1947 ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தவர் சித்தராமையா. இவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். பள்ளிப் படிப்பை திண்ணைப் பள்ளிக்கூடத்தின் வாயிலாக பெற்ற சித்தராமையா இளநிலை அறிவியல் மற்றும் சட்டப்படிப்பை மைசூர் பல்கலைக் கழகத்தில் படித்தார். வழக்கறிஞராகவும் சிலகாலம் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படிக்கும்போதே சோசலிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சித்தராமையா மாணவராக பல்வேறு போராட்டங்களில் பங்குபெற்றார்.
அப்போதே மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். தொடர்ந்து,1977-ல் ஜார்ஜ் பெர்ணாடஸின் லோக் தளக் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, 1983 கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து முதல்முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். தொடர்ந்து, ராமகிருஷ்ண ஹெக்டேவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, ஜனதா கட்சியில் இணைந்தார் சித்தராமையா. 1985-ல் ஜனதா கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏவாகத் தேர்வான சித்தராமையா, கால்நடைத்துறை மற்றும் போக்குவரத்துறை அமைச்சரானார்.
தொடர்ந்து, 1992-ல் ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ல் தேர்தலில் வெற்றிபெற்ற சித்தராமையா, தேவகவுடாவின் அமைச்சரவையில் துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, நிதியமைச்சராகவும் ஆனார். 1999-ல் ஜனதா தளத்தில் இருந்து மதச்சார்பற்ற ஜனதாதளம் தேவகவுடாவின் தலைமையில் உருவானபோது, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரானார். தொடர்ந்து, 2004 வரை அந்தப் பதவியில் நீடித்தார். 2004 தேர்தலில் வெற்றிபெற்று, காங்கிரஸுடன் அமைந்த கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார்.
ஆனால், காங்கிரஸ் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராக, அவருக்கும் தேவகவுடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. தொடர்ந்து அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி, மக்களுக்கான சமூகநீதி இயக்கம் எனும் அமைப்பைத் தொடங்கினார். ஆனால், சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் கட்சியில் 2006 -ல் இணைந்தார். அவரின் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், தேவகவுடாவின் தீவிரமான பிரசாரத்தையும் மீறி 256 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
தொடர்ந்து, 2008, 2013 தேர்தலில் வருணா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாகத் தேர்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். 2013-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடத்தைப் பிடிக்க அம்மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலில், சாமுண்டீஸ்வரி, பதாமி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு, பதாமி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற தள கூட்டணி ஆட்சி அமைய அதன் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார். தொடர்ந்து, 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய, இந்தக் கூட்டணி ஆட்சி கலைந்து, பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டும் வெல்ல, தனது எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, 2023-ல் நடந்த பொதுத் தேர்தலில், மாபெரும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக கர்நாடகாவின் முதல்வராகத் தேர்தெடுக்கப்பட்டார்.
கர்நாடக அரசியலில் களத்தில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சித்தராமையா. தேவராஜ் அர்ஸுக்குப் பிறகு ஐந்தாண்டுகள் முழுமையாக கர்நாடகாவை ஆட்சி செய்த முதலமைச்சர் சித்தராமையாதான். அதுமட்டுமல்ல, 1994 முதல் 2023 வரை மொத்தம் 14 முறை நிதியமைச்சராக கர்நாடக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையும் அவரையே சாரும். கர்நாடகாவின் நிதிநிலையை முன்னேற்றியதில் அவரின் பங்கு மிக முக்கியமானது. மிக எளிய குடும்பப் பின்னணி, சோசலிசப் பின்புலத்தில் இருந்து வந்ததால், அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கினார் சித்தராமையா. கர்நாடகவுக்கெ உரிய சாதி அரசியலில் இருந்து விலகி அனைத்து தரப்பு மக்களாலும் சாதி கடந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக உயர்ந்தவர் சித்தராமையா. கர்நாடகாவில் பெரும்பான்மையான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகம் அல்லாத குருபா சமூகத்தில் இருந்து வந்து இவ்வளவு பெரிய இடத்தில் நிற்பதே மிகப்பெரிய சாதனைதான். சோசலிசப் பின்புலத்தில் இருந்து வந்த காரணத்தினால், மதச்சார்பற்ற அரசியலிலும் எப்போதும் உறுதியாக இருப்பார் சித்தராமையா.
அதுமட்டுமல்ல, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, கன்னட மொழியை வளர்த்தெடுத்தல், கர்நாடகாவுக்கு தனிக்கொடி, கர்நாடக மாநில உரிமை என கன்னட தேசிய இன உணர்விலும் சித்தராமையாவை யாரும் மிஞ்சிவிட முடியாது. கொள்கை ரீதியாக அதிரடியான அரசியலுக்குச் சொந்தக்காரரான சித்தராமையா, நகைச்சுவை உணர்வோடு பேசுவதோடு மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களிடத்திலும் மிகவும் பண்போடு பழகக்கூடியவர். மிகச்சிறந்த கொள்கைவாதி, அரசியல் அனுபவமிக்கவர், நிர்வாகத் திறமையுடைவர் என்பதைத்தாண்டி பத்து முறை எம்.எல்.ஏ, பலமுறை அமைச்சர், இரண்டுமுறை துணை முதலமைச்சர், இரு முறை முதலமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தபோதும் அவர்மீது ஒரு ஊழல் புகார்கள்கூட இல்லை.
‘A King Raised by the People’ என்பதே சித்தராமையாவின் பயோபிக்கான லீடர் ராமையா படத்தின் டேக்லைன். கர்நாடகா அரசியல் களத்தில் இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ சித்தராமையாவுக்குக் கட்சிதமாகப் பொருந்தும்.
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து இன்று கர்நாடாகவின் ராஜாவாக உயர்ந்திருக்கும் அவர் நிச்சயமாக மாஸ் லீடர்தான். ஏற்கெனவே விடுதலை திரைப்படத்தில் வாத்தியாராக தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்த விஜய் சேதுபதி, லீடர் ராமையாவாக நடித்தால் மாநிலம் தாண்டியும் முத்திரை பதிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.