இந்தியாவால் தேடப்படும் நபரும், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவருமான நிழல் உலக தாதா, தாவூத் இப்ராகிம். இவர் தற்போது பாகிஸ்தானில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஏற்கெனவே, வெளிநாடு தப்பிய தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகளை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணி முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்துள்ளது.
இந்தநிலையில் தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் ரத்னகிரி (தாவூத் இப்ராகிமின் சொந்த ஊராகும். சிறுவயதில் அவர் அங்கு சில காலம் வாழ்ந்து உள்ளார்) மாவட்டத்தில் உள்ள 4 விவசாய நிலத்தை மத்திய அரசு நேற்று (ஜன.5) ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது.
அந்தச் சொத்துக்களின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்திருந்தது. இதையடுத்து, இந்த நிலத்துக்கான ஏலம் விடும் பணி நேற்று மும்பையில் உள்ள ஆயகர் பவனில் நடைபெற்றது.
கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடியாளர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் (எஸ்ஏஎப்இஎம்ஏ) கீழ் உரிய அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அவருடைய மொத்த 4 சொத்துக்களில் 2 சொத்துகள் முறையே ரூ.2.01 கோடி மற்றும் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலம்போனது.
170.98 சதுர மீட்டர் அளவுள்ள விவசாய நிலம் அதிகபட்சமாக ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதேபோன்று, 1,730 சதுர மீட்டர் அளவுள்ள மற்றொரு விவசாய நிலம் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டது. இந்த இரண்டு சொத்துக்களையும் வழக்கறிஞர் அஜய் ஸ்ரீவஸ்தவா ஏலம் எடுத்தார். இவர் இம்முறை தாவூத் இப்ராகிம் சொத்துக்களை ஏலம்விட்டபோது, வெறும் 15,440 ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலத்தை அதிகபட்சமாக ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இது நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 1,300 மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது தொடர்பாக வழக்கறிஞர் அஜய் ஸ்ரீவஸ்தவா, ”நிலத்தின் சர்வே எண் மற்றும் பணத்தின் கூட்டுத் தொகை நியூமராலஜிபடி எனக்கு ராசியானது. இந்த இடம் எனது பெயருக்கு மாற்றியதும் இங்கு ஒரு சனாதன பள்ளியைத் தொடங்குவேன். நான் ஒரு சனாதானி இந்து. நான் ஏற்கெனவே தாவூத் இப்ராகிமின் பங்களாவை 2020-இல் ஏலம் எடுத்திருந்தேன். அங்கு சனாதன தர்மம் பாத்ஷாலா அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதைப் பதிவுசெய்த பிறகு, அங்கும் சனாதன பள்ளியையும் தொடங்குவேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்குமுன்பு வழக்கறிஞர் அஜய் ஸ்ரீவஸ்தவா மும்பையின் நாக்பாடாவில் உள்ள தாவூத் இப்ராகிமுக்குச் சொந்தமான இரண்டு கடைகளை 2001-ல் ஏலம் எடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, 2020-ல் தாவூத்தின் பங்களா ஒன்றையும் ஏலத்தில் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எஸ்ஏஎப்இஎம்ஏ சட்டத்தின்கீழ் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்புடைய 17-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு மும்பை பென்டி பஜாரில் இருந்த தாவூத் இப்ராகிமுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துகள் ரூ.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. அதில் ஓர் உணவகம் ரூ. 4.53 கோடிக்கும், ஆறு பிளாட்கள் ரூ. 3.53 கோடிக்கும், விருந்தினர் மாளிகை ரூ. 3.52 கோடிக்கும் விற்பனையானது என்பது நினைவுகூரத்தக்கது.