பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு, பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், பிரான்சிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கடைசியும் மற்றும் 36 ஆவது ரஃபேல் விமானம் இந்தியா வந்தடைந்தது.
முன்னதாக, வழங்கப்பட்ட மற்ற 35 ஜெட் விமானங்கள் மேற்கு வங்கத்தில் உள்ள அம்பாலா, ஹரியானா மற்றும் ஹஷிமாராவில் நிறுத்தப்பட்டுள்ளன. RB வால் எண் கொண்ட 36வது விமானம், வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அதன் அனைத்து உதிரிகளும் மற்றும் பிற பாகங்களும் மாற்றப்பட்டு, பிரான்ஸ் நாடானது இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் திறன்கொண்ட இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2 ஆயிரத்து 223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது. எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை கருவியும் ரஃபேல் போர் விமானத்தில் உள்ளது. இதில் துல்லியமாக இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் இதர அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றை பொருத்தலாம்.
ரஃபேல் போர் விமானத்தின் எடை சுமார் 10 டன் அதாவது, பத்தாயிரம் கிலோ இருக்கும் என்றும் எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்டவுடன் 24 ஆயிரத்து 500 கிலோவாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. விமானத்தின் நீளம் 15.3 மீட்டர் கொண்டதாகவும், இறக்கையின் நீளம் 10.8 மீட்டர் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஃபேல் விமானத்தின் உயரம் 5.3 மீட்டராகும்.
சீனாவுடனான மோதலின் உச்சக்கட்டத்தில் இந்திய விமானப்படையில் ரஃபேல் விரைவாக இணைக்கப்பட்டு, முதல் தொகுப்பில் கொண்டுவரப்பட்ட ஒரே வாரத்தில் லடாக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் நிலைநிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.