காலாவதியாகும் சட்ட மசோதா - துணை குடியரசுத் தலைவர் வேதனை

காலாவதியாகும் சட்ட மசோதா - துணை குடியரசுத் தலைவர் வேதனை
காலாவதியாகும் சட்ட மசோதா - துணை குடியரசுத் தலைவர் வேதனை
Published on

மக்களவையின் கலைப்புக்கு பிறகு சட்ட மசோதா காலாவதியாவது மக்களவையின் நேரத்தை வீணாக்குவதாக உள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில்  சட்ட மசோதா காலாவதியாவது குறித்து  அவையின் உறுப்பினர்களிடையே துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு நேற்று பேசினார். அப்போது அவர் மக்களவை கலைப்பிற்கு பிறகு சட்ட மசோதா காலாவதியாவது மக்களவையின் நேரத்தை வீணடிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார். அத்துடன் அவர், “16ஆவது மக்களவையின் காலம் முடிந்ததற்கு பிறகு 22 சட்ட மசோதாக்கள் காலாவதியாகியுள்ளது. ஏனென்றால் அவை அனைத்தும் முதலில் மக்களவையில் கொண்டவரப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஒரு அவையில் சட்ட மசோதாவை நிறைவேற்ற அதிக நேரமும் சிரமமும் தேவைப்படும். அவ்வாறு இயற்றப்பட்ட சட்டமசோதாக்கள் காலாவதி ஆகும் போது அது மக்களவையின் நேரத்தை வீணாக்குவது போலவே இருக்கிறது. எனவே மக்களவையில் இயற்றப்பட்ட சட்டமசோதாக்கள் காலாவதியாவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மேலும் மாநிலங்களவையில் 33 சட்டமசோதாக்கள் நிலுவையிலுள்ளன. அவற்றில் 3 சட்ட மசோதாக்கள் 20 ஆண்டுகளாக நிலுவையிலுள்ளது. 6 சட்ட மசோதாக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 14 சட்ட மசோதாக்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் 10 சட்டமசோதாக்கள் 5 ஆண்டுகள் வரை நிலுவையிலுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக  ‘இந்திய மருத்துவ கவுன்சில் திருத்தம் மசோதா 1987’ 32ஆண்டுகளாக மாநிலங்களவையில் நிலுவையிலுள்ளது. 

இவ்வாறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை தடுக்க, மாநிலங்களவையில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ள மசோதாக்கள் தானாகவே காலாவதி ஆகும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அத்துடன் மாநிலங்களவையில் அதிக நேரத்தை சட்ட மசோதா குறித்து விவாதத்திற்கு பயன்படுத்தவேண்டும். இதற்கு மாறாக அவையை நடக்கவிடாமல் தடுப்பதை தவிர்க்கவேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 107 படி, மக்களவையில் நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையிலுள்ள மசோதாக்கள் ஆகியவை மக்களவை கலைப்பிற்கு பிறகு காலாவதி ஆகிவிடும். இதன்படி 16ஆவது மக்களவை கலைப்பிற்கு பின் ஆதார் சட்ட மசோதா, முத்தலாக் சட்ட மசோதா, குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகிய 22 சட்டமசோதாக்கள் காலாவதி ஆனது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com