பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் மிசாபாரதி வீடு ஆகிய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. இதுவரை 5 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் தான் லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து