பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருப்பதைக் கண்டு அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா, ட்விட்டரில் கடுமையாகப் பதிவிட்டுள்ளார்.
பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த சமயத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிக்கொண்டு ரயில்வே துறையில் அவர்களுக்கு வேலை வழங்கினார் என்றும், அத்தகைய நிலங்களை அவர் தனது குடும்பத்தினரின் பெயரிலேயே பதிவுசெய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில், மார்ச் 15ல் விசாரணைக்கு ஆஜராகும்படி வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, லாலு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவியிடம், நேற்று சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், இன்று டெல்லியில் லாலு பிரசாத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுதொடர்பாக அவரின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ”அப்பாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள். இது சரியில்லை. இதெல்லாம் நினைவில் இருக்கும். நேரம் சக்தி வாய்ந்தது. இதை நினைவில்கொள்ள வேண்டும். இவர்கள் என் தந்தையை தொந்தரவு செய்கிறார்கள்? இவர்களின் தொல்லையால் அவருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், டெல்லியின் நாற்காலியை அசைப்போம். இப்போது சகிப்புத்தன்மைதான் பதில் அளித்துக்கொண்டிருக்கிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அதில் அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. உடல்நலக் குறைவால் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த லாலுவுக்கு, கடந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. லாலு பிரசாத் யாதவுக்கு அவரது மகள் ரோகிணி ஆச்சார்யாவே சிறுநீரகம் தானம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சைக்கு பிறகு லாலு, டெல்லியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து நிலையில்தான், இன்று சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இப்படியான நிலையில்தான் அவரது மகள் ரோகிணி ட்விட்டரில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
- ஜெ.பிரகாஷ்