காந்தி பிறந்த நாள் அன்று காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஒருவர் பிறந்திருக்கிறார். அவர்தான் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமர். எளிமை மற்றும் சிறந்த நிர்வாகம் திறன் ஆகியவற்றிற்கு பெயர் போன லால் பகதூர் சாஸ்திரி. இவர் தனது 16வயதில் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். அத்துடன் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்று திரும்பியுள்ளார்.
இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராக முதன்முதலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அங்கு நாட்டிலேயே முதல்முறையாக நடுத்துநர் பணிக்கு பெண்களை பணி அமர்த்திய பெருமை இவருக்கு உண்டு. அதன்பிறகு 1951ஆம் ஆண்டு இவர் மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றார். இவர் மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றினார். இவர் ரயில்வே அமைச்சராக இருந்தப் போது அரியலூரில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் மீண்டும் மத்திய அமைச்சராக இணைந்த இவர் பசுமைப் புரட்சி, வெள்ளைப் புரட்சி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் 1961ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு தொடர்பான சந்தானம் குழுவை இவர் அமைத்தார். இந்த அமைப்பு தனது அறிக்கையை சமர்ப்பித்த போது லால் பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமராக இருந்தார். இந்தக் குழுவின் சில பரிந்துரைகளை சாஸ்திரி அமல்படுத்தினார்.
சாஸ்திரி பிரதமராக இருந்தப் போது 1965ஆம் ஆண்டு பாகிஸ்தான், இந்தியா மீது போர் தொடுத்தது. இந்தப் போர் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் நின்றது. இதன்பின்னர் ரஷ்ய பிரதமர் இரு நாடுகளிடம் சமரசம் செய்ய ஒப்புக்கொண்டார். இதற்காக லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு தாஷ்கன்ட் சென்றார். அங்கு தாஷ்கன்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். எனினும் அவர் இந்தியா திரும்பவதற்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.