மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளியில் கட்டணச் சலுகை கேட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோரை, பெண் அடியாளை வைத்து பள்ளி நிர்வாகம் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பைப்விவாடி நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு சில விதிமுறைகள் படி கட்டண சலுகைகளும் வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயிலும் 2 மாணவர்களின் பெற்றோர் தங்கள் கட்டணச் சலுகை விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
கட்டணச் சலுகை அளிக்க பள்ளி நிர்வாகம் மறுத்த நிலையில், பள்ளி முதல்வரை சந்திக்க பெற்றோர் அனுமதி கேட்டுள்ளனர். அப்போது, அந்த பள்ளி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பெண் அடியாள் ஒருவர், மாணவர்களின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் அவர்களை தகாத வார்த்தையாலும் திட்டியுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி நிர்வாகம் மற்றும் பெண் அடியாள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் அடியாள் பெற்றோரை துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் சில கல்வி நிறுவனங்கள் கட்டுக்கடங்காத மாணவர்களைக் கட்டுப்படுத்த மற்றும் கோபமான பெற்றோரைத் தடுக்க அடியாட்களை நியமித்ததாக கூறப்படுகிறது. பெற்றோரைத் தாக்கிய பெண் அடியாள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார்.