ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாக லடாக் பாஜக எம்பி ஜம்யாங் செரிங் நம்க்யால் தெரிவித்துள்ளார்.
கேள்வி : லடாக் மக்கள் உங்களுக்கு அமோக வரவேற்பு அளித்தார்கள். நீங்கள் லடாக் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : எனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த முடிவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகதான் நான் பார்க்கிறேன். நாட்டை சிறப்பாக வழிநடத்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கான வரவேற்பு. லடாக் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மக்களின் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது கடினம். ஆனாலும் லடாக் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 370 சட்டப்பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கடந்த 6ஆம் தேதி நிறைவேற்றியதற்கு லடாக் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கேள்வி: 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது எந்த அளவுக்கு லடாக் மக்களுக்கு உதவும்?
பதில்: பெரிய அளவில் உதவும். கடந்த 70 ஆண்டுகள் என்ன நடந்தது என்பது லடாக் மக்களுக்கு மட்டும் தான் தெரியும். டீ கடையில் நிற்கும், தெருவில் நடந்து செல்லும் யாரை வேண்டுமானாலும் கேட்கலாம். காஷ்மீரை ஆட்சி செய்தவர்கள் 370 சட்டப்பிரிவை எந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தினார்கள் என்று கூறுவார்கள். இன்று புதிய விடியல் ஏற்பட்டுள்ளது. எங்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
கேள்வி: ஆனால் இன்றும் காஷ்மீர் மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதே?
பதில்: அது வேறு. உங்கள் தொலைக்காட்சி மூலம் இந்திய மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், கடந்த ஆட்சிகளில் 144 தடை உத்தரவின் போது 41,500 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போது முன்னெச்சரிக்கை காரணமாக தான் ஊரடங்கு உத்தரவை பிரதமர் அமல்படுத்தியுள்ளார். ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. அதுதான் வித்தியாசம்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியில் கூட மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: எங்குள்ளது காங்கிரஸ் கட்சி? நாட்டில் காங்கிரஸ் கட்சி என்ற ஒன்று இருக்கிறது என்று இன்னும் நம்புகிறீர்களா? அக்கட்சிக்கு தலைவர் கிடையாது. எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யாரும் எதுவும் செய்யலாம். காங்கிரஸ் கட்சியினர் நாட்டு நலனின் அக்கறை கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி இன்றும் இருக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
கேள்வி: 370 ரத்து செய்யப்பட்டது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று நீங்கள் நம்பினால், இன்றும் 144 தடை உத்தரவு சில பகுதிகளில் அமலில் இருப்பதற்கான காரணம் என்ன?
பதில் : கலாச்சார அடையாளம், பொருளாதாரம், காஷ்மீரின் நிலப்பரப்பு ஆகியவற்றை காக்க வேண்டும் என்பதால் தான் இம்முடிவை அரசு எடுத்தது. அவற்றை காப்பாற்றும் பொறுப்பு எங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினருக்கு உள்ளது. லடாக்கிற்கு பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புதிய இந்தியாவில் நவீன லடாக்கை கட்டமைக்க நாங்கள் விரும்புகிறோம்.